சிறிய கிராமத்தில் வாழ்க்கை. அப்பா, அம்மா, இரண்டு அக்கா, தம்பி என நிறைவான குடும்பத்தில் வளர்ந்தவர். பள்ளிக் காலத்தில் இருந்தே படிப்பில் முதலிடம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவி. பொறியியல் துறையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்தவர். படித்து முடித்ததும் திருமணம்... இப்படியாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது ராஜாத்தி கமலக்கண்ணனுக்கு.
ஆனால், தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது ராஜாத்திக்கு. கூடவே, அவருக்கு உலகத்தைக் கற்றுக்கொடுக்க கணவரும் கைகோக்க, யூடியூபில் ஒரு சேனலைத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மடைப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் வசித்துக்கொண்டே ராஜாத்தி ஈட்டிவரும் வருமானம், ஆச்சர்யத்துக்கு உரியது.
``யூடியூப் ஆரம்பிச்ச புதுசுல பெருசா எந்த வருமானமும் இல்ல. ஆனா, அதுல நான் பதிவிட்ட சத்துமாவு வீடியோதான், என் பாதையைவே மாற்றி, சத்துமாவு விற்பனை தொழிலை கையில் எடுக்க வெச்சு, இன்னைக்கு அதுவே என் அடையாளமாகியிருக்கு'' - உற்சாகமாகச் சொல்கிறார் ராஜாத்தி.
`ராஜீஸ் கிச்சன்' என்ற அவரின் யூடியூப் சேனல் மூலம் தற்போது ராஜாத்தி மாதம் 1.5 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்முனைவோராக இருக்கிறார். மேலும் இவரின் கீழ் 15 பேர் மறுவிற்பனை செய்பவர்களாக மாறியிருக்கின்றனர்.
இவரின் இந்த சாதனை பயணம் குறித்து அவரிடம் பேசினோம்.
``முதலீடு அதிகமா தேவையில்ல. திறமையும், விடா முயற்சியும் இருந்தாலே போதும். ஒரு பெண்ணால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லாம போகும்'' என்று படபடவெனப் பேச ஆரம்பிக்கிறார் ராஜாத்தி.
``படிப்பை முடிச்ச கொஞ்ச நாள்லேயே, பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம். கணவர் பெங்களூர்ல வேலைபார்த்துட்டு இருந்ததால அங்க போயிட்டேன். அங்க வீட்ல சும்மாதான் இருந்தேன். `நீ நல்லா படிக்கிற பொண்ணு, வேலைக்குப் போகணும், சொந்தக் கால்ல நிக்கணும்'னு கணவர் சொல்லிட்டே இருப்பார். யூடியூப்ல ஏதாச்சும் வீடியோ போடுனு சொன்னவர் என் கணவர்தான்.
அந்த நேரத்தில் நான் கர்ப்பமானதால வேலைக்குப் போகமுடியலை. அப்போ, நான் யூடியூப் பார்த்து வித்தியாசமா சமைப்பேன். என் கணவர், `நீயும் இதுபோல வீடியோ போடலாமே...'னு கேட்க, 2017-ம் வருஷம் சமையல் வீடியோ போடுவதற்காக ஒரு யூடியூப் சேனலை தொடங்கினோம். ஆரம்பத்தில் 8 மாசம் நிறைய வீடியோஸ் போட்டோம். அப்புறம் ரெண்டாவது குழந்தை கர்ப்பமானவுடன், முதுகு வலி, கால் வலினு கர்ப்பகால பிரச்னைகள், பிரசவம், குழந்தைனு மூணு வருஷமா வீடியோஸ் எதுவும் போட முடியல.
பின்பு, என் உடல் பிரச்னைக்காக மருத்துவமனை சென்றிருந்தப்போ, மருத்துவர்கள், உடல் எடையைக் குறைக்கச் சொன்னாங்க. கிட்டத்தட்ட 20 கிலோ வரை குறைத்தேன். அப்புறம்தான் என் பயணமே தொடங்குனுச்சு. 2020 பிப்ரவரி மாதத்தில் இருந்து மறுபடியும் தொடர்ந்து வீடியோஸ் பதிவிட ஆரம்பிச்சேன். அப்போது கொரோனா லாக்டௌன்ல பலரும் வீட்டுல இருந்ததால, சமூக வலைதளங்கள்ல நல்ல வளர்ச்சி இருந்தது. என் சேனலையும் நிறைய பேர் பார்க்க ஆரம்பிச்சாங்க.
அப்படி நான் போட்ட வீடியோக்கள்ல, ஒரு நாள், வீட்டுக்குத் தேவையான சத்துமாவு எப்படி செய்றது என்ற வீடியோ போட்டிருந்தேன். அதைப் பார்த்த சிலர் கமென்ட்ஸ்ல, தங்களுக்கு சத்துமாவு தயார் செய்து தரச்சொல்லிக் கேட்டாங்க. ஆரம்பத்தில் மாசத்துக்கு 2 முதல் 3 கிலோ வரை தமிழ்நாட்டுக்கு உள்ளேயே கொரியர் அனுப்பிட்டு இருந்தேன்.
தற்போது சிங்கப்பூர், மலேசியா முதல் ஆஸ்திரேலியா வரை எங்க சத்துமாவு பயணிக்குது. ஆரம்பத்துல எப்படி பேக்கிங் செய்றது, கொரியர் செய்றதுனு எதுவுமே தெரியாது. இப்போது இதற்கென தனி செயல்முறையையே வெச்சிருக்கோம்.
எங்க சத்துமாவில் 29 பொருள்களை சேர்த்து அரைக்கிறோம். அதுக்கான பொருள்களை பக்கத்துல உள்ள கடையில வாங்கினப்போ விலை அதிகமாவும், தரம் குறைவாவும் இருந்தது. இதனால மொத்தமா கொள்முதல் செய்ய ஆரம்பிச்சோம். அப்படி கொள்முதல் செய்த இடத்துல பொருள்கள் சுத்தமாவும் தரமாவும், விலை குறைவாவும் இருந்ததால, அந்தப் பொருள்களை மறுவிற்பனை செய்றதையும் ஒரு தொழிலா செய்ய ஆரம்பிச்சோம்.
அதுக்கு அப்புறம் எங்க சத்துமாவு விற்பனை, சத்துமாவு மூலப் பொருள்கள் விற்பனை மட்டுமல்லாமல், மிளகு, ஏலக்காய் போன்ற வாசனை மசாலா பொருள்களை மேற்குத் தொடர்ச்சி மலையில் கொள்முதல் செய்து விற்க ஆரம்பிச்சோம். பின் எங்ககிட்ட விளம்பரத்துக்காக வந்த இயற்கை முறையில் செய்யப்பட்ட சோப், ஷாம்பு, நாப்கின் போன்றவற்றைப் பயன்படுத்தினேன். அதெல்லாம் தரமா இருந்ததால, அந்தப் பொருள்களை மறுவிற்பனை செய்றதையும் ஆரம்பிச்சேன்'' என்று சொல்லும் ராஜாத்தி, இப்போது நாட்டுச்சர்க்கரை, செக்கு எண்ணெய்கள், மற்ற பொருள்கள் என்று 55 பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்த விற்பனைகளின் மூலமும், யூடியூப் மூலமும் மட்டுமே மாதம் 1.5 லட்சம்வரை சம்பாதிக்கிறார். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு, காணொளிகளை எடுப்பது, சத்துமாவு தயாரிப்பது என எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் ராஜாத்தி தன் இந்த முன்னேற்றத்துக்கு முழுமுதற் காரணம் தன் கணவர் மட்டுமே என்கிறார்.
``இப்போவரை என் போன்லேயேதான் வீடியோ எடுத்து, எடிட் பண்ணி, போஸ்ட் பண்றேன்.
மாதம் 12 கிலோ சத்துமாவு செய்துகொண்டிருந்தேன். இப்போ 50 கிலோவுக்கு மேல் விற்பனை செய்றேன். இப்போ எனக்குக் கீழ 15 மறு விற்பனையாளர்கள் இருக்காங்க. அடுத்த இலக்கு, எங்க சத்துமாவை ஒரு பிராண்டா உருவாக்கணும்.
என்னால முடியுதுனா, நிச்சயமா எல்லா பெண்களாலும் முடியும். உங்க கையில மொபைல் இருக்கா? அதுதான் முதலீடு. சமூக வலைதளத்தை சரியா பயன்படுத்தும்போது அதுவே நமக்கு சந்தையா மாறும்.
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Subscribe YouTube |
0 Comments