மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் என்பதால் தைரியமாக மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த நாட்களே பள்ளிகள் நடந்தன. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு நாளை தமிழகம் முழுவதும் மீண்டும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். ஆகையால் பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு மேஜையிலும் தலா இரு மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். பெற்றோர் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். பெற்றோருக்கு நிகராக மாணவர்கள் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது. ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது.
மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வகுப்புகள் நடைபெறும். வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். தொடக்கம் முதலே பாடம் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும். மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர வேண்டும். 95 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்திய பின்னரே ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.
0 Comments