அருப்புக்கோட்டை:டி.ஆர்.பி., தேர்வு எழுதுபவர்களுக்கு தொலைதுாரத்தில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்.12(நாளை) முதல் 20 வரை நடக்க உள்ளது
இதற்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் தேர்வு மையங்கள் தொலை துாரங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். விண்ணப்பித்த போதே தேர்வு மையம் குறித்து குறிப்பிட்டிருந்தும் வேறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுத உள்ளவர் கூறியதாவது: விண்ணப்பத்தில் மதுரை குறிப்பிட்டு இருந்தேன். அருப்புக்கோட்டையை சேர்ந்த எனக்கு 200 கிலோமீட்டர் தாண்டி திருச்சியில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள என் உறவினருக்கு சென்னையில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 9:30 மணிக்கு துவங்கும் தேர்விற்கு 7:30 மணிக்கே மையத்தில் இருக்க வேண்டும் என ஹால் டிக்கெட்டில் கூறப்பட்டுள்ளது. தொலை துாரத்தில் இருந்து வருபவர்களுக்கு எப்படி இது சாத்தியமாகும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட வேண்டி வரும். தேர்வு எழுதுபவர்களுக்கு மன உளைச்சலைதான் உருவாக்கும், என்றார்.முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகி கூறியதாவது: தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பித்த போது குறிப்பிட்ட ஊரில் மையத்தை ஒதுக்காமல் இருப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் அரசு அதிருப்தியை சம்பாதித்து கொண்டுள்ளது, என்றார்.
.
0 Comments