Ads

சனிக்கிழமைகளில் மாணவர்கள் வரத்து தொடர்ந்து சரிவு - விடுமுறை வழங்க வலுக்கும் கோரிக்கை


உலகம் முழுவதும் கொரானா பாதிப்பு காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளைக் காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி கற்பிக்கும் இனிய பொற்காலம் வீணாவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களின் கற்றல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கல்வி கற்கும் நேரம் முழுவதும் வீணானது.

இருப்பினும் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது.


இதன் வழியாக மாணவர்கள் ஓரளவிற்கு கல்வி கற்று வந்தாலும் பள்ளிச் சூழலில் கல்வி கற்பதை போன்று முழுமையான கல்வியை இதில் பெற முடியவில்லை, என்பதும் மாணவர்கள் சக நண்பர்களுடன் கலந்துரையாடி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் இதன் மிகப் பெரிய குறையாகும்.

இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து மீண்டு 2021,செப்டம்பர் 1 ஆம் தேதியிலிந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் துவங்கியது. பிறகு படிப்படியாக இதர வகுப்புகளுக்கும் பள்ளிகள் துவங்கப்பட்டது.


இந்நிலையில் மீண்டும் மூன்றாம் அலை பாதிப்பினால் பொங்கல் விடுமுறைக்கு பிந்தைய 15 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டது. 


அதன்பிறகு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் முழுமையாக மீண்டும் செயல்படத் துவங்கி  தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் துவங்கிய பள்ளிகள் தொடர்ந்து வாரத்தில் 6 நாட்களும் செயல்பட வேண்டும் என கல்வித்துறையின் உத்தரவிற்கு ஏற்ப சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இதன் காரணமாக  ஓரளவிற்கு  "வேகமாக பாடங்களை" முடிக்க இயலும் என்பதாக ஆசிரியர்கள் மட்டத்தில் கருத்துக்கள் நிலவி வந்தாலும் மாணவர்களோ வாரத்தில் 6 நாட்களும் தொடர்ந்து பள்ளி செயல்படுவதால் தொய்வடைந்து உள்ளனர். இதனால் பொதுத்தேர்வு நெருங்கிவரும் சூழ்நிலையில் கூட ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாணவர் வருகை எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது.  


இது குறித்து மாணவர்களின் கருத்தானது, "விட்டால் தொடர்ந்து லீவு விடுறீங்க! வெச்சா தொடர்ந்து ஸ்கூல் வைக்கறீங்க!  முடியல சார் ! எங்களுக்கு நடு நடுவே கொஞ்சம் ரெஸ்ட் தேவை"  எனக் கூறுகின்றனர்.


எனவே மீண்டும் முன்பை போல் வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை விட வேண்டும். இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் அவர்களின் உடைகளைத் துவைத்து போடுவதற்கும், குடும்பத்திற்கு இதர வழிகளில் உதவி செய்வதற்கும், எஞ்சிய நேரங்களில் சற்று ஓய்வாக வீட்டுப் பாடங்களை படித்து அடுத்த வாரத்திற்கான முன் தயாரிப்புகளை செய்யவும் ஏதுவாக இந்த வார இறுதி நாட்கள் பயன்படும். தேவைப்பட்டால் பெறுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகள் வைக்கலாம். ஏனெனில் சிறப்பு வகுப்புகளானது வழக்கமான வகுப்புகளாக செயல்படாமல் ஒரு வகுப்பிற்கு - அரை நாள் வீதம் ஆசிரியர்கள் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வாராந்திர 3 மணி நேர மாதிரி தேர்வுகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி, தேர்வு குறித்த அச்சத்தை போக்க இயலும்.


கற்றல் கற்பித்தல் பணி என்பது தொடர்ந்து கற்பிப்பதால் மட்டுமே முழுமையாக நிறைவடையாது மாணவர்களிடமும் கற்றல் ஆர்வம் மேலோங்க வேண்டும் அதற்கு உரிய ஓய்வு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அவர்கள் குழந்தைகள் அல்லவா! அவர்களின் மனநிலையை பெரியவர்களாகிய நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.


எனவே கல்வித்துறை EMIS-ல் பதியப்படும் தினசரி வருகை விவரங்களை சரிபார்த்து வார நாட்களை விட வார இறுதி நாட்களில் மாணவர் எண்ணிக்கை குறைவதைக் கருத்தில் கொண்டு அவர்களின் கருத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் பள்ளி விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.  விரைவில் கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

1484643

Followers